ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தனது நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்தப் போவதில்லை என ஸ்பெயின் அதிரடியாக அறிவித்துள்ளது. நேட்டோ (NATO) அமைப்பில் உறுப்பினராக இருந்தபோதிலும், அமெரிக்காவின் இந்த ‘தன்னிச்சையான’ போருக்கு ஒத்துழைக்க முடியாது என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ திட்டத்தின் கீழ், ஈரான் மீது தாக்குதல் நடத்தச் செல்லும் போர் விமானங்கள், குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் வானிலேயே எரிபொருள் நிரப்பும் டாங்கர் விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதுமட்டுமின்றி, ஸ்பெயின் மண்ணில் உள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளங்களான ரோட்டா மற்றும் மோரோன் (Moron) ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் B-52 ரகப் போர் விமானங்கள் இனி ஸ்பெயினைச் சுற்றிக்கொண்டு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இது எரிபொருள் செலவையும், பயண நேரத்தையும் கணிசமாக அதிகரிக்கும்.
இந்த விவகாரம் குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறுகையில் “நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐநா சபை ஆகியவற்றின் முறையான ஒப்புதல் இன்றி அமெரிக்கா எடுக்கும் இந்தத் தன்னிச்சையான முடிவை ஸ்பெயின் ஆதரிக்காது. சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான போர்களில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது வர்த்தகத் தடைகளை விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளது. இருப்பினும், தனது நாட்டின் இறையாண்மையையும், போர் வேண்டாம் என்ற மக்களின் உணர்வையும் மதித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்பெயின் அரசு உறுதியாக உள்ளது.
மேலும் ஸ்பெயின் தனது வான்வெளியை மூடினாலும், சர்வதேச கடல் எல்லையான ஜிப்ரால்டர் நீரிணை வழியாகச் செல்லும் விமானங்களைக் கட்டுப்படுத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. இருப்பினும், தரைவழித் தளங்கள் மற்றும் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்திருப்பது அமெரிக்காவின் ஈரான் நோக்கிய ராணுவ நகர்வுகளைப் பெருமளவு தாமதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
