பெலாரஸ் நாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை அந்நாட்டு அரசு அதிரடியாக விடுதலை செய்துள்ளது. இந்த மனிதாபிமான நடவடிக்கைக்காக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தனது சிறப்புத் தூதர் ஜான் கோல் (John Coale) மூலம் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த வாரம் மட்டும் கூடுதலாக 250 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதன் மூலம் கடந்த மே மாதம் முதல் இதுவரை விடுவிக்கப்பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியுள்ளது.
இந்த விடுதலையைத் தொடர்ந்து, பெலாரஸ் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.
குறிப்பாகப் பெலாரஸ் நிதி அமைச்சகம் மற்றும் சில உர நிறுவனங்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், லுகாஷென்கோவை “பெரிதும் மதிக்கப்பட வேண்டிய அதிபர்” என்று புகழ்ந்ததோடு, விரைவில் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாகப் பனிப்போர் நிலவி வந்த அமெரிக்கா – பெலாரஸ் உறவில், இந்தச் சிறைக் கைதிகள் விடுதலை ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நகர்வு சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
