தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒன்றிய பாஜக அரசு ஆணவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எட்டு தொகுதியை மக்கள் தொகை அடிப்படையில் குறைப்போம் என்று மத்திய அரசு கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதனை தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் கடைப்பிடித்ததற்கு தண்டனை 8 தொகுதிகளை குறைப்போம் என்று சொல்வதா? இதுதான் சமூக நீதியா?.

இதனை கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகின்ற மார்ச் ஐந்தாம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் எங்களுடைய கண்டனத்தை நாங்கள் பதிவு செய்வோம். தமிழ்நாட்டு மக்களை ஓரம் கட்ட நினைக்காதீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு மன்னிக்கின்ற ஒரு குணம் உண்டு. அதை நீங்கள் சீண்டி பார்க்க வேண்டாம். தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டாம். மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதால் நீங்கள் எதையும் செய்து விடலாம் என்று கனவு காணாதீர்கள். மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்று செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.