அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை சாதாரண உடையில், முகக்கவசம் அணிந்து சாமானிய பக்தரைப் போல அதிரடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடமிருந்து சமூக வலைதளங்கள் மூலம் பெறப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது கோவில் வளாகம், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம் மற்றும் தரிசன வரிசைகளை அமைச்சர் பார்வையிட்டார்.
மேலும், பக்தர்களோடு அமர்ந்து அன்னதான உணவைச் சாப்பிட்டு அதன் தரத்தையும் கேட்டறிந்தார். அப்போது, விரைவு தரிசனம் செய்ய வழிவகை செய்வதாகக் கூறி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த இரு முன்னாள் ராணுவ வீரர்களின் உதவியோடு, அர்ச்சகர் ஒருவர் அமைச்சர் என்று தெரியாமல் அவரிடமே தலா ரூ.1,000 வீதம் 4 பேருக்கு ரூ.4,000 லஞ்சம் கேட்டுள்ளார். அமைச்சர் தன்னிடம் ரொக்கப்பணம் இல்லை என்று கூறியதும், அதனை ‘ஜிபே’ ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெற்றுக்கொண்ட அதிர்ச்சி சம்பவமும் இந்த ஆய்வில் கச்சிதமாக அம்பலமானது.
இறைவன் முன்னிலையில் பக்தர்கள் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அமைச்சர் ரமேஷ் உடனடியாகப் பணியிடை நீக்க உத்தரவைப் பிறப்பித்தார். இந்த நிலையில் தற்போது அர்ச்சகர் ஐயப்பன் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் லஞ்சம் வாங்கிய அர்ச்சகருக்கு உடந்தையாக இருந்த காவலாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
