அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் ஏராளமான கப்பல்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், ஜலசந்தியைத் திறக்க ஈரான் மறுத்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் கப்பல் பின்வாங்கியதாகவும் செய்திகள் வெளியானது பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், அமெரிக்க ராணுவம் இந்தத் தகவலை மறுத்துள்ளதோடு, கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கத் தொடர்ந்து முயன்று வருகிறது.

மறுபுறம், மத்திய கிழக்கு நாடுகளின் மற்றொரு பகுதியிலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. லெபனானில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் கடுமையான விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு லெபனானில்உள்ள குனைன், பராச்சித் மற்றும் துலைன் உள்ளிட்ட பல நகரங்களை இலக்கு வைத்து இஸ்ரேலியப் போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன.

பீரங்கித் தாக்குதல்களும் நடத்தப்பட்டதால் அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஒரே நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் இஸ்ரேல்-லெபனான் மோதல் என உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.