மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும் ஈரானிடம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 22 நாடுகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.

தற்போது நிலவி வரும் போர் சூழலால் ஈரான் இந்த முக்கிய கடல்வழிப் பாதையை மூடியுள்ளது. இதனால் உலக நாடுகளில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதோடு, அரபு நாடுகளின் வர்த்தகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அரபு நாடுகளிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து, அமைதியை நிலைநாட்டவும் உலக பொருளாதார பாதிப்பை தவிர்க்கவும் ஈரானுக்கு இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளன.