ஈரான் – அமெரிக்கா போர் உலகையே உலுக்கி வரும் நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் இந்தியாவிற்கு விடுத்துள்ள நேரடி மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் செய்தி ஊடகம் ஒன்றில் பேசிய அவர், தற்போதைய போர்ச் சூழலில் அமெரிக்கா ஒருவேளை பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக மும்பை மற்றும் டெல்லி மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் எனப் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார்.
2014 முதல் 2017 வரை இந்தியாவில் பாகிஸ்தான் தூதராகப் பணியாற்றிய ஒருவரே இவ்வளவு கீழ்த்தரமான மிரட்டலை விடுத்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் எரிசக்தி நெருக்கடியால் உலகம் தவித்து வரும் வேளையில், பாகிஸ்தான் தேவையின்றி இந்தியாவை வம்புக்கு இழுப்பதாக அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர். “எங்களை யாராவது தாக்கினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்; இந்தியா விரும்பும் இடமெல்லாம் எங்களால் தாக்க முடியும்” என ஆவேசமாகப் பேசிய பாசித், பின்னர் தற்போதைய சூழலில் இது போன்ற நிலை ஏற்பட வாய்ப்பில்லை என மழுப்பியுள்ளார்.
இருப்பினும், இந்தியத் தலைநகர் மற்றும் வர்த்தக மையத்தின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர் விடுத்த இந்த ‘ஏவுகணை மிரட்டல்’, சமூக வலைதளங்களில் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
