அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் விசுவாசமான அட்டர்னி ஜெனரலான (தலைமை வழக்கறிஞர்) பாம் பாண்டியை (Pam Bondi) அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

நீதிமன்றங்களில் டிரம்பின் ‘குரலாக’ ஒலித்த பாம் பாண்டி, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளைத் தவறாகக் கையாண்டதாக எழுந்த புகாரே இந்த நீக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், டிரம்பின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதும் அதிபரின் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது.

விசுவாசமாக இருந்தும் பதவியைப் பறி கொடுத்த பாம் பாண்டி, “அதிபர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்” எனத் தனது ‘X’ தளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

“>

பாம் பாண்டியின் நீக்கத்தைத் தொடர்ந்து, டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞராக இருந்த டாட் பிளான்ச் (Todd Blanche) தற்காலிகமாக அமெரிக்க நீதித்துறையின் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் நீதித்துறையின் மிக முக்கியமான காலகட்டத்தைத் தான் வழிநடத்தியதாகப் பெருமிதம் கொண்டுள்ள பாண்டி, இனி தனியார் துறையில் தனது பணியைத் தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார். டிரம்பின் நிர்வாகத்தில் கடந்த சில நாட்களாகவே உயர் அதிகாரிகள் மற்றும் தளபதிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருவது வெள்ளை மாளிகையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஈரானுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நீதித்துறையிலும் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.