ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளதோடு, அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தவும், வரி விதிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால் பல்வேறு நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஈரானின் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜீத் ஹகீம் இலாஹி பீகார் தலைநகர் பாட்னாவிற்கு வருகை தந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். ஈரான்-அமெரிக்கா இடையே போர்நிறுத்தம் ஏற்பட பாகிஸ்தான் உதவும் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா தனது சுயநலத்திற்காகச் சில நாடுகளைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனது நாட்டுக்கு ஆதரவு தெரிவித்த பாட்னா மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே இங்கு வந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.