அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தாமாக முன்வந்து தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினால், அவர்களுக்குப் பணமும் இலவச விமான டிக்கெட்டும் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. “புராஜெக்ட் ஹோம் கமிங்” (Project Homecoming) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், வெளியேறச் சம்மதிக்கும் நபர்களுக்கு 2600 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹2.4 லட்சம்) மற்றும் இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில், இப்போது ‘கௌரவமாக’ வெளியேற இந்தத் திட்டத்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிமுகப்படுத்தியுள்ளது.

​இதற்காக ‘CBP Home’ என்ற பிரத்யேக மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் கைதானோ அல்லது சிறை வைக்கப்பட்டோ சித்திரவதை செய்யப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் வழக்கமான பயணிகளைப் போலவே விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரை வலுக்கட்டாயமாக நாடு கடத்த அமெரிக்க அரசுக்கு சுமார் 18,000 டாலர்கள் செலவாகும் நிலையில், இந்தச் சுய விருப்பத்தின் பேரிலான வெளியேற்றத் திட்டத்தால் அரசுக்குச் செலவு குறைவதோடு, வரிப்பணமும் மிச்சமாகும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்தச் சலுகையைப் பயன்படுத்தாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள் பிடிபட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கா வரத் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.