சென்னை மாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சல்மான் சலீம். இவர் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசடி கும்பல் சல்மான் சலீமிடம் ஆசை வார்த்தைகள் பேசி 17 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் விருதுநகர் மாவட்டம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சதுரகிரி அவரது மனைவி புஷ்பா ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு சல்மானின் பணம் சென்றது தெரியவந்தது. அவர்கள் அந்த பணத்தை காசோலை மூலம் எடுத்துள்ளனர்.

போலீசார் சதுரகிரி, புஷ்பா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பேஸ்புக் மூலம் புஷ்பாவை அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் ஓட்டோ என்பவர் தொடர்பு கொண்டு பேசி நான் சொல்லும்படி நடந்து கொண்டால் கமிஷன் கிடைக்கும் எனக் கூறினார்.

சதுரகிரி அனுமதி கொடுத்ததால் புஷ்பா மோசடி திட்டத்தில் இணைந்து ஓட்டோ கூறிய ஆலோசனைப்படி மூன்று வங்கி கணக்குகளை தொடங்கினார். மோசடி செய்து கிடைக்கும் பணம் புஷ்பா சதுரகிரியின் வங்கி கணக்குக்கு வரும். அதனை ஓட்டோ கூறும் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

சல்மான் அனுப்பிய 17 லட்சம் பணத்தில் புஷ்பா சதுரகிரி தம்பதிக்கு மூன்று லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் கமிஷனாக கிடைத்துள்ளது. மீதமுள்ள பணத்தை ஓட்டோவுக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.