தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த முறை 53 தொகுதிகளைக் கேட்டுப் பெற முடிவு செய்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அப்போது போட்டியிட்ட முக்கிய நிர்வாகிகளில் 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இருப்பினும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக வாக்குகள் பெற்ற சட்டமன்றத் தொகுதிகளைக் கணக்கில் கொண்டு இந்த 53 தொகுதிகளின் பட்டியலைத் தயாரித்துள்ளதாகத் தெரிகிறது. வரும் டிசம்பர் 15 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவிருக்கும் நிலையில், அவர் மூலம் அ.தி.மு.க. தலைமையிடம் இந்தப் பட்டியலை பா.ஜ.க. வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 8 தொகுதிகள் அடங்கும். மேலும், தாங்கள் பெறும் தொகுதிகளிலிருந்து 17 இடங்களை கூட்டணிக்கு வரும் மற்ற கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுக்கவும் பா.ஜ.க. முடிவெடுத்துள்ளது. பா.ஜ.க. பட்டியலிட்டுள்ள மொத்த 53 தொகுதிகளின் விவரமும் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த அதிகப்படியான எதிர்பார்ப்பால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
