நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் எச்.வினோத் கூட்டணியில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு மத்தியில், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர், ஒரு திரைப்படத்தின் பிரதிகள் தயாரிப்பாளர் அல்லது தணிக்கை வாரியத்திடம் மட்டுமே இருக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் தணிக்கை வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கிருந்தே படம் கசிந்திருக்க வாய்ப்புள்ளதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். இந்த கசிவு என்பது இந்திய திரைத்துறையை மிரட்டுவதற்காக அமித்ஷாவால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று அவர் விமர்சித்துள்ளார்.
இதனால் மத்திய அரசின் சித்தாந்தங்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களுக்கு எதிராகவோ எந்தவொரு நடிகரோ, தயாரிப்பாளரோ கருத்து தெரிவிக்கக் கூடாது என்பதற்காக இத்தகைய அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திரைத்துறையினர் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
