தமிழகத்தில் தவெக ஆட்சிக்கட்டிலில் ஏறியதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2,500 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த மிக முக்கியமான அதிரடி தகவலை நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், தவெக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இந்தத் தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது. இதற்கிடையே, கடந்த மே மாதம் இத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்யக் கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு அறிவித்தபோது, “2,500 ரூபாய் தருவதாகக் கூறிவிட்டு, ஏற்கனவே கொடுத்து வந்த ஆயிரம் ரூபாயையும் இழுத்தடிக்கிறீர்களா?” என்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் காரசாரமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதன் பின்னர் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ. 1,000 உரிமைத் தொகை பயனாளிகளின் கணக்கில் சரியாக வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதி அமைச்சர் மரிய வில்சன், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ரூ. 2,500 திட்டம் குறித்துப் பேசுகையில், “மகளிருக்கான ரூ. 2,500 உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கும் தேதியை வரப்போகும் நாட்களில் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்று அதிரடி அப்டேட்டை கொடுத்துள்ளார்.
இந்தத் தகவல் தற்போது தமிழகப் பெண்கள் மத்தியிலும் சோசியல் மீடியாவிலும் காட்டுத்தீயாய் பரவி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
