​சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் ஒருவனின் பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா சிக்கிய விவகாரம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. ஆசிரியர்கள் நடத்திய அதிரடி சோதனையில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வர, “பள்ளிக்கூடமா இல்லை போதைப்பொருள் கூடாரமா?” எனப் பெற்றோர்கள் அலறத் தொடங்கியுள்ளனர். இந்தச் செய்தியைக் கேட்டு கொதித்தெழுந்த எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், “அதிமுக ஆட்சியில் மாணவர்கள் கையில் லேப்டாப் இருந்தது, ஆனால் விடியா திமுக ஆட்சியில் கஞ்சா தான் இருக்கிறது” என அனல் பறக்கும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் முற்றிலும் தோல்வியடைந்து விட்டார் என்றும் அவர் சாடியுள்ளார்.

​இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடியார், “இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த அரசு, தமிழ்நாட்டுக்கே செய்கிற மாபெரும் துரோகம்” என ஆவேசப்பட்டுள்ளார். போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வெறும் “ஓ” போடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இன்னும் மிச்சமிருக்கும் இரண்டு மாத ஆட்சியிலாவது உருப்படியான நடவடிக்கை எடுங்கள் என ஸ்டாலின் அரசை ஓங்கித் தட்டியுள்ளார். பள்ளிக்கூடம் வரை போதைப்பொருள் ஊடுருவியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.