சீனாவில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை தன் சேமிப்புப் பணத்தைத் திருடியதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனின் பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில், அவன் தனது தந்தையுடன் வசித்து வந்தான்.
இந்நிலையில் கடந்த காலங்களில் சீனப் புத்தாண்டு போன்ற விசேஷங்களின் போது உறவினர்கள் பரிசாக வழங்கிய ‘சிவப்பு உறைகளில்’ இருந்த சுமார் 80,000 இந்திய மதிப்பில் சுமார் 11 லட்சம் ரூபாய் பணத்தைச் சிறுவன் வங்கியில் சேமித்து வைத்திருந்தான்.
ஆனால், அவனது தந்தை தனது இரண்டாவது திருமணச் செலவுகளுக்காக அந்தப் பணத்தை முழுவதுமாகப் பயன்படுத்தியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவன், தனது தாயின் உதவியுடன் சட்டப்படி நீதி கேட்டுப் போராடினான். இந்த வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம், சிறுவனுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது.
இதனால் மைனர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பரிசுப் பணம் அவர்களுக்கே சொந்தமான தனிப்பட்ட சொத்து என்றும், பெற்றோர்கள் பாதுகாவலர்களாக இருந்து அதைப் பராமரிக்கலாமே தவிர, அதைத் தங்களின் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்த உரிமையில்லை என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், சிறுவனிடமிருந்து எடுக்கப்பட்ட முழுத் தொகையையும் வட்டியுடன் சேர்த்து தந்தை திருப்பித் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தன் உரிமையை நிலைநாட்டத் தந்தையையே எதிர்த்து நின்ற இந்த 10 வயது சிறுவனின் துணிச்சல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
