பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது “யூதாவின் கேடயம்” (Shield of Judah) என்ற பெயரில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான், புனித நகரமான கோம், இஸ்ஃபஹான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்கள் மீது 30-க்கும் அதிகமான ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகம் ஆகியவை பிரதான இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து, உச்ச தலைவர் கமேனி ரகசியமான மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளார். ஈரானின் மொபைல் நெட்வொர்க் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் இந்தத் தாக்குதலால் முடங்கியுள்ள நிலையில், ஈரான் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ஈரான் மீதான “முக்கியப் போர் நடவடிக்கைகள்” தொடங்கிவிட்டதாகவும், ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் அணுசக்தித் திறனை முழுமையாக அழிப்பதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த நான்கு நாட்களுக்கு இந்தத் தாக்குதல்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு “மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என ஈரானிய ராணுவம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 2025-இல் இரு நாடுகளுக்கும் இடையே 12 நாட்கள் வான்வழிப் போர் நடைபெற்ற நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல் உலக நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முன்னெச்சரிக்கையாகத் தங்களது வான்வெளியை மூடியுள்ளன.
