உத்தர பிரதேசம், ஷாஜகான்பூர் மாவட்டம் தில்ஹார் பகுதியில் உள்ள குருகுல் மகாவித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த 13 வயதான அனுராக் என்ற சிறுவன், கடந்த செவ்வாய்க்கிழமை தங்குமிடத்தில் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 18-ம் தேதி ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு “அப்பா, தனியாக வாருங்கள்… ஒரு முக்கிய விஷயம் சொல்லணும்” என்று தனது தந்தை பிரிஜேஷ் யாதவிடம் தொலைபேசியில் கூறியிருந்த அனுராக், ஐந்து நாட்களுக்குள் மரணம் அடைந்தது சோகத்தையும், சந்தேகத்தையும் ஒருசேர கிளப்பியுள்ளது.
அன்று காலை 6 மணியளவில் பள்ளி ஆசிரியர் பிரணவ், “மாணவர் உடல்நிலை சரியில்லை” என்று தகவல் தெரிவித்தார். மாணவரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. அனுராக் தூங்கிய பாயிலும், அருகில் தூங்கிய மற்றொரு மாணவர் மாதவின் கைகளிலும் ரத்தக்கறைகள் இருந்தது,
மேலும், மாணவனின் மூக்கு, காதுகளில் ரத்தம் வழிந்தது, தலையில் காயம் இருந்தது என கூறப்படுகிறது. மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக பரிந்துரை செய்த நிலையில், போலீசார் பாய்கள், சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மாணவனின் மரணம் குறித்து பெற்றோர் “என் மகனுக்கு ஏதோ நடந்திருக்கிறது, ஆனால் அதை பள்ளி நிர்வாகம் மறைக்கிறது” என கண்ணீர் மல்கக் குற்றஞ்சாட்டினர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராம் லக்கன் (18) என்ற மூத்த மாணவர் அனுராகை தாக்கியதற்கான சாட்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், குருகுல பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 6-ம் வகுப்பு மாணவன் அனுராக் (வயது 13)..மேலும் அந்த , விடுதிக்கு ராம் லக்கன் (வயது 18) என்ற 10-ம் வகுப்பு மாணவன் புதிதாக வந்திருக்கிறான். இந்நிலையில், இரவில் படுப்பதில் இடம் பிடிப்பதற்காக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில், ராம் லக்கன் கையால் குத்தியும், உதைத்தும் உள்ளான்.
கோபத்தில் கடுமையாக தாக்கியதில், அனுராக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளார் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகள் எழும் நிலையில், இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
