ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் 45 வயதான நீதிமன்ற ஆசிரியர் நீரஜ் சர்மா, 130 கி.மீ. வேகத்தில் வந்த கார் மோதி உயிரிழந்த வழக்கில், அவரது 23 வயது மகள் ஆயுஷி சர்மாவே பல கோடி ரூபாய் சொத்துக்காக தனது தந்தையைக் கூலிப்படையை வைத்து திட்டமிட்டு கொன்றிருப்பது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மறைந்த குடும்பத் தலைவரின் கருணை அடிப்படையிலான அரசு வேலை, நீரஜின் 16 வயது மாற்றுத்திறனாளி மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆயுஷி, தன் தந்தை வழி மாமாவான மோகன் ஸ்வரூபுடன் சேர்ந்து இந்தச் சதியைத் தீட்டியுள்ளார்.

ஆக்ரா நெடுஞ்சாலையோரம் உள்ள பல கோடி மதிப்புள்ள ஐந்து பிகா பரம்பரை நிலத்தை மாமாவுக்கு எழுதித் தருவதாகக் கூறி, ஏற்கனவே ஒருமுறை மஹிந்திரா தார் வாகனத்தை வைத்து தந்தையைக் கொல்ல முயன்றபோது, அவர் ஒரு நொடியில் தப்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நீரஜ், தனது பாதுகாப்புக்காக வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினார்.

கேமராவில் மாட்டிக்கொள்வோம் என அஞ்சிய ஆயுஷியும் அவளது சதிகாரர்களும், கொலையை வேறு பொதுச் சாலைக்கு மாற்றினர். சம்பவத்தன்று நீரஜ் தனது மாற்றுத்திறனாளி மகனைப் பயிற்சி மையத்தில் விட்டுவிட்டு வந்தபோது, அவசரம் என்று பொய் கூறி ஆயுஷி அவரை வரவழைத்துள்ளார்.

அவர் நடந்து வந்த பாதையில் 130 கி.மீ வேகத்தில் வந்த ஸ்கார்பியோ வாகனம் நீரஜைப் பின்னால் மோதி 100 அடி தூரத்திற்குத் தூக்கி வீசியது. விபத்து நடந்தவுடன் துயரமடைந்தது போல் நடித்த ஆயுஷியின் நாடகம், காவல்துறையினர் கைப்பற்றிய டிஜிட்டல் தடயங்களும் மாமாவின்குறுஞ்செய்திகளும் தற்பொழுது முற்றிலுமாகத் தகர்த்தெறிந்துள்ளன.