மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  மிகப்பெரிய வெற்றியை நோக்கிப் பயணித்து வருவது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள தொகுதிகளில் பாஜக 199 இடங்களில் முன்னிலை வகித்து, மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர உள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள், கடந்த ஆண்டு லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா வந்தபோது ஏற்பட்ட குளறுபடிகளே மம்தாவின் வீழ்ச்சிக்குத் தொடக்கம் என்று கிண்டலாகக் கூறி வருகின்றனர்.

கால்பந்து ரசிகர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்ற மெஸ்ஸியின் வருகையை மாநில அரசு சரியாகக் கையாளாததும், அங்கு நடந்த குழப்பங்களும் கால்பந்து பிரியர்களான வங்காள மக்களின் கோபத்தைத் தூண்டியதாகக் கருதப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியும் இந்த மெஸ்ஸி விவகாரத்தை முன்வைத்துப் பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் அரசு மேற்கு வங்கத்தின் விளையாட்டுத் துறையைச் சீரழித்துவிட்டதாகவும், மெஸ்ஸி போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரரின் வருகையில் நடந்த ‘ஜங்கிள் ராஜ்’ அராஜகம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்ததாகவும் அவர் விமர்சித்தார்.

“>

 

பாஜக ஆட்சிக்கு வந்தால் ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் விளையாட்டுத் துறை மேம்படுத்தப்படும் என அவர் உறுதியளித்திருந்தார். இப்போது பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற உள்ள நிலையில், “மெஸ்ஸியின் வருகையால்தான் இந்த அரசியல் மாற்றம் சாத்தியமானது” என ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.