நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் களமிறங்கித் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வரை போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான குரலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களும் இயக்குநர்களும் நேரடியாகவே களத்தில் இறங்கி ஆதரவு கரங்களை நீட்டி வருகின்றனர்.
ஏற்கனவே CJP, SFI, DYFI போன்ற மாணவர் அமைப்புகள் சென்னை தலைமைச் செயலகம் மற்றும் எழும்பூர் பகுதிகளில் நடத்திய போராட்டங்களில் பாடகர் அறிவு போன்றோர் கைது செய்யப்பட்டது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. வடமாநிலத்தில் ஆலியா பட், சல்மான் கான் மற்றும் டெல்லி போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்ற பிரகாஷ் ராஜ், சோஷியல் மீடியாவில் குரல் கொடுத்த பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் எனப் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், நடிகை ஆண்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் அமீர், “ஜனநாயகத்தைக் காப்பாற்ற இங்கே ஒரு சிறிய கூட்டம் போராடுகிற இதே நேரத்தில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காப்பாற்ற ஒரு பெரிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அது பெரிய கூட்டமாக இருந்தாலும், அதைவிட இந்த கூட்டம் அறிவார்ந்த கூட்டம்” என்று மிகக் காட்டமாகத் தன் உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளை விவரித்து சாடிய அமீர், “நீட் தேர்வை கொண்டு வராமல் பார்த்துக்கொள்கிறோம், எங்களிடம் அதற்கான ரகசியம் இருக்கிறது என்று சொல்பவர்களும் அதைச் செய்ய மாட்டார்கள். ஆட்சியை முடித்துவிட்டு சென்றுவிடுவார்களே தவிர கடைசிவரை அந்த ரகசியத்தைச் சொல்ல மாட்டார்கள். அனிதா மரணத்திற்கு ஆதரவு தெரிவிக்க அவரது வீட்டிற்குச் சென்றவர்களும் அதிகாரத்திற்கு வந்த பிறகு எதையும் செய்ய மாட்டார்கள். ஆட்சியாளர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு நிலையைக் கொண்டுவருவார்கள் என நம்புவது முற்றிலும் ஒரு ஏமாற்றுவேலை” என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், எந்த ஒரு தனிப்பட்ட அரசும் கட்சியும் இதைச் செய்யாது என்பதைத் தான் ஆழமாக நம்புவதாகத் தெரிவித்த அமீர், அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே நீட் தேர்வை ஒழிக்க முடியும் என்றும், ஆனால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றும் கூறினார். அரசியல்வாதிகளுக்கு அரசியல் என்பது வெறும் பிழைப்புவாதம் மட்டுமே, அதைத்தான் அவர்கள் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்கள் என்றும், மக்கள் தான் விழிப்புணர்வுடன் போராட வேண்டும் என்றும் இயக்குநர் அமீர் எழும்பூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
