பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தான் இருந்தபோது, தன்னைச் சென்னை சிறைக்கு மாற்ற அப்போதைய அதிமுக அமைச்சர்கள் சிலர் தீவிரமாக வற்புறுத்தியதாகச் சசிகலா ஒரு அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். “அவர்கள் பேச்சை கேட்டு நான் அன்று சென்னைக்கு வந்திருந்தால், இன்று உயிருடன் இருந்திருப்பேனா என்பதே சந்தேகம்” என்று அவர் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் இருந்த சில முக்கியப் புள்ளிகள் தன்னைச் சிறையிலேயே தீர்த்துக்கட்ட சதி செய்தார்களோ என்ற ரீதியில் சசிகலா பேசியிருப்பது, நேரடியாக அதிமுக மாஜி அமைச்சர்களைக் குறிவைப்பதாகவே உள்ளது. 9 ஆண்டுகளாக அமைதி காத்த சசிகலா, இப்போது தேர்தல் நேரத்தில் இத்தகைய ரகசியங்களை உடைக்கத் தொடங்கியிருப்பது, வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
