முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து பல ஆண்டுகளாக நீடித்து வந்த விமர்சனங்களுக்கு சசிகலா இன்று பகிரங்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “அம்மாவை நான் கொன்றுவிட்டதாக எதிரிகள் திட்டமிட்டுப் பழி சுமத்தினார்கள்; அரசியலுக்காகச் செய்யப்பட்ட அந்தப் பொய்களை யாராவது நம்புவார்களா?” என்று அவர் உருக்கமாகக் கேள்வி எழுப்பினார். செப்டம்பர் 22-ல் மெட்ரோ ரயில் தொடக்க விழாவின் போதே ஜெயலலிதா கடும் உடல்வலியால் அவதிப்பட்டதாகவும், அப்பல்லோவில் உடல்நிலை தேறி வந்த நிலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்புதான் உயிரைப் பறித்தது என்றும் சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.
சுமார் 70 நாட்கள் அப்பல்லோவில் ஜெயலலிதாவுடன் நிழலாகத் தங்கியிருந்த சசிகலா, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கைக்குப் பிறகு இப்போது பொதுமேடையில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார். ஜெயலலிதாவின் கடைசித் தருணங்களில் மருத்துவர்கள் போராடியதையும், தொண்டர்களின் பிரார்த்தனைகளையும் நினைவுகூர்ந்த அவர், தன் மீதான ‘கொலைகாரப் பழி’ ஒரு அரசியல் சதி என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
