தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சசிகலா அவர்களின் அதிரடி அறிவிப்பு அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், சசிகலா மீண்டும் அதிமுக-வை ஒருங்கிணைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று (பிப்.24), பசும்பொன்னில் வைத்து புதிய கட்சியைத் தொடங்குவதாக சசிகலா அதிரடியாக அறிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறக் கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். “கடந்த 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது போதும், இனி என்னால் அப்படி இருக்க முடியாது” என்று முழங்கியுள்ள அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சசிகலாவின் இந்த முடிவு அதிமுக – பாஜக கூட்டணிக்குச் சவாலாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
