தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யையும், நடிகை த்ரிஷாவையும் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையில் சிக்கிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போது தனது பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னதாக, நயினாரின் பேச்சைக் கண்டித்து த்ரிஷா வெளியிட்ட அறிக்கை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது. பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவியத் தொடங்கிய நிலையில், நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.

​அவர் பேசுகையில், “அன்று கூட்டத்தில் பேசும்போது நான் தெரியாமல் வாய் தவறிப் பேசிவிட்டேன். எனது இந்தப் பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அல்லது யாருக்கேனும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால், அதற்காக நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் த்ரிஷா தொடர்பான சர்ச்சைப் பேச்சுக்களால் கடந்த சில நாட்களாகக் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வந்த நயினார், தற்போது ‘சரணாகதி’ அடைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.