இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும் போது, ஒரு ட்ரோன் கேமராவை அடித்து வீழ்த்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் போது நடந்த உண்மைச் சம்பவம் எனப் பலரும் நம்பினர்.

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படும் நிலையில், அந்த வீடியோவில் வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

இந்த வைரல் வீடியோவை வைத்து, கேரள காவல்துறை மக்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மொபைல் கேமராக்களைக் கொண்டு அத்துமீறுவதும், அவர்களின் துயரமான தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதும் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனிநபர் சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை என்றும், அனுமதியின்றி மற்றவர்களின் தனிப்பட்ட காட்சிகளைப் பகிர்வது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி (பிரிவு 66E) மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.