டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மகுடம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த ஹை-வோல்டேஜ் போட்டிக்கு முன்பாக, இந்திய அணி எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
வழக்கமாக அகமதாபாத்தில் விளையாடும்போது இந்திய வீரர்கள் தங்கும் ‘ஐடிசி நர்மதா’ ஹோட்டலைத் தவிர்த்துவிட்டு, இந்த முறை திடீரென ‘தாஜ் ஸ்கைலைன்’ ஹோட்டலுக்கு மாறியுள்ளனர்.
கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை பைனலில் இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றபோதும், சமீபத்திய சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றபோதும் இந்திய அணி ஐடிசி நர்மதா ஹோட்டலில் தான் தங்கியிருந்தது.
இந்த ‘ராசியில்லாத’ சென்டிமென்ட் காரணமாகவே, வெற்றியை உறுதி செய்ய பிசிசிஐ இந்த முறை ஹோட்டலை மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே கிரகணத்தின்போது பயிற்சியைத் தவிர்த்தது, கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனை எனப் பல சென்டிமென்ட் விஷயங்களைச் செய்து வரும் இந்திய அணி, இந்த ஹோட்டல் மாற்றத்தின் மூலம் சாம்பியன் பட்டத்தைத் தட்டித்தூக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
