இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பான அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணியும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
சாம்பியன் பட்டத்தைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்போட்டியில், கோப்பையை வெல்லப்போவது யார் என்பதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் இந்தப் போட்டியை நேரலையில் காணச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகப் பிரம்மாண்டத் திரைகள் அமைக்கப்பட உள்ளன
போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மாலை 5 மணி முதல் 7 மணி வரை பல்வேறு தமிழகப் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன்படி ஜநாட்டுப்புறப் பாடல்கள், பெரிய மேளம், மல்லர் கம்பம், நடன நிகழ்ச்சிகள் போன்றவைகள் நடைபெற உள்ளது.
இந்த கலைத் திருவிழாவைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு இறுதிப்போட்டியின் நேரலை ஒளிபரப்பு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெரினா கடற்கரையே நாளை விழாக்கோலம் பூணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
