2026 டி20 உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த முக்கியமான பட்டியலில் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே வீரர் சஞ்சு சாம்சன் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் விளாசிய 89 ரன்கள் மற்றும் தொடர் முழுவதும் அவர் காட்டிய சீரான அதிரடி ஆட்டம் அவரை இந்தப் பட்டியலில் முன்னணியில் நிறுத்தியுள்ளது.

சஞ்சு சாம்சனுடன் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம், லுங்கி இங்கிடி, நியூசிலாந்தின் டிம் செய்ஃபர்ட், ரச்சின் ரவிந்திரா மற்றும் இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ் ஆகியோர் மோதுகின்றனர். நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தனது மேஜிக்கை நிகழ்த்தினால், தொடர் நாயகன் விருதை வெல்வது அவருக்கு உறுதியாகிவிடும். இந்திய ரசிகர்கள் பலரும் சஞ்சுவின் இந்த அங்கீகாரத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.