வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்த வாய்ப்பே இல்லை எனத் தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

ஏபி டிவில்லியர்ஸின் யூடியூப் சேனலில் பேசிய அவர், “தென்னாப்பிரிக்காவை அனைவரும் ‘சோக்கர்ஸ்’ (Sokers) என்று அழைக்கிறார்கள். ஆனால் நியூசிலாந்து எங்களை விட அதிக முறை இறுதிப் போட்டிகளுக்குச் சென்று தோற்றுள்ளது. இந்த முறையும் அவர்கள் இந்தியாவை வீழ்த்தத் தவறினால், முறைப்படி ‘சோக்கர்ஸ்’ என்ற பட்டத்தை பிளாக் கேப்ஸிடமே ஒப்படைத்து விடுவேன்” எனத் துணிச்சலாகக் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணி ஏற்கனவே 2019 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிகளில் தோற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஸ்டெய்ன், சொந்த மண்ணில் அசுர பலத்துடன் இருக்கும் இந்தியாவை வீழ்த்துவது அவர்களுக்கு “சாத்தியமற்றது” என்றார். இதற்கு ஏபி டிவில்லியர்ஸும் உடன்பட்டார்.

2015 உலகக்கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை நியூசிலாந்து வீழ்த்தியதை நினைவுகூர்ந்த அவர், “அன்று அவர்கள் எங்களை வீழ்த்தியிருக்காவிட்டால், ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் நாங்கள் வீழ்த்தியிருப்போம்; நியூசிலாந்து எப்போதுமே இறுதிப் போட்டியில் கோட்டை விடுகிறது” எனத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை இந்தியா வெற்றி பெற்றால், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பட்டத்தைத் தக்கவைத்த முதல் அணி மற்றும் சொந்த மண்ணில் கோப்பை வென்ற முதல் அணி என்ற இரட்டை சாதனையைப் படைக்கும்.