வயதான காலத்தில் ஆதரவின்றி உழைக்கும் முதியவர்களின் நிலை பலரையும் கலங்கச் செய்யும். அந்த வகையில், தனது பிழைப்பிற்காகச் சாலையோரம் கார் மற்றும் கால் மிதிகளை (Mats) கழுவித் தரும் ஒரு மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மூதாட்டி கஷ்டப்பட்டு வேலை செய்வதைப் பார்த்த ஒரு கார் உரிமையாளர், அவருக்கு நேரடியாகப் பணம் கொடுத்தால் அவர் தன்மானத்துடன் மறுக்கக்கூடும் என்று கருதி, ஒரு நெகிழ்ச்சியான காரியத்தைச் செய்துள்ளார். அவர் வேண்டுமென்றே தனது காரைச் சேறாக்கி, அந்த மூதாட்டியிடம் கழுவக் கொடுக்கிறார்.
அந்த மூதாட்டி காரைக் கழுவத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரைத் தடுத்து நிறுத்திய அந்த நபர், ஒரு பெரும் தொகையைப் பரிசாகக் கொடுக்கிறார். ஆரம்பத்தில் தயங்கிய அந்தப் பாட்டி, பிறகு பெரும் மகிழ்ச்சியுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்கிறார். இன்ஸ்டாகிராமில் 16 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற இந்த வீடியோ, “இன்னும் மனிதநேயம் சாகவில்லை” என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது. அந்த மூதாட்டியின் முகத்தில் தெரிந்த களைப்பும், பிறகு வந்த புன்னகையும் பலரது இதயங்களைத் தொட்டுள்ளது.
