திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் செய்வதில் சிலர் காட்டும் அபாயகரமான யோசனைகள் குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டும் வகையில் கோவாவில் நடந்த சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நகரும் காரின் கூரையில் படுத்து கொண்டிருந்த ஜோடியை, அந்த வழியாகச் சென்ற ஒருவர் வீடியோவில் பதிவு செய்துள்ளார். கோவாவின் பிரிட்டோனா – சால்வடார் டோ முண்டோ சாலையில் ஓடியதாகக் கூறப்படும் டொயோட்டா ஹைலேண்டர் எஸ்யூவி காரின் கூரையில், தம்பதியினர் படுத்தபடி புகைப்படப் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
ஒரு பாதசாரி இதைக் கண்டு காரின் வழியைத் தடுத்து, “இங்கே என்ன நடக்கிறது? இது படப்பிடிப்பா? இப்படிச் செய்வது ஆபத்தல்லவா?” என்று கேள்வி எழுப்பினார். ஜோடியின் பாதுகாப்பு குறித்து பயணி கவலை தெரிவித்தபோது, ஓட்டுநர், “பயம் வேண்டாம், மணிக்கு 5 கிமீவேகத்தில் தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். இது சாதாரணப் போட்டோஷூட் தான்” என்று பதிலளித்தார்.
‘Pre wedding’ photoshoot atop a moving car!
I sincerely hope for the benefit of the child and the society at large that these two don’t procreate! 🙄 pic.twitter.com/rIbE6BAEc7
— Wordita (@wordi25) November 27, 2025
கார் நின்ற பின்னரும் தம்பதியினர் அசையாமல் இருந்ததைப் பார்த்த பாதசாரி அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஓட்டுநர் அவர்களை எழுப்பும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி பரவியதையடுத்து, ஆபத்தான போட்டோஷூட் யோசனைகள், திருமணக்காலத்தில் அதிகரித்து வரும் ‘லைக்’ வேட்டைக்கான சாகசங்கள், அவற்றால் உருவாகும் உயிர்பயம் பற்றி சமூக ஊடகங்களில் கடும் விவாதம் நடைபெற்றுவருகிறது.
மேலும் இதேபோன்று டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு திருமண ஹால்டி நிகழ்ச்சியில், தம்பதியினர் வைத்திருந்த ஹைட்ரஜன் பலூன்கள் தீப்பற்றி வெடித்ததில் மணமகனும் மணமகளும் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தக் காட்சியை தம்பதியினரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை அடுத்து அது வைரலாகியது.
