ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு இடையே நடந்த ஜாலியான சீண்டல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இப்போட்டியில் சுப்மன் கில் கொடுத்த கேட்ச்சை விராட் கோலி பிடித்த பிறகு, அவரை நோக்கி ‘பாம்பு’ போன்ற செய்கையைச் செய்து கிண்டல் செய்தார்.

கோலியின் இந்தத் துடிப்பான கொண்டாட்டம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில், இதற்கு பதிலடியாக சுப்மன் கில் செய்த செயல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் கிண்டலுக்கு பதிலளிக்கும் விதமாக, பெவிலியனில் அமர்ந்திருந்த சுப்மன் கில் ஸ்கோர்போர்டை நோக்கி சைகை காட்டினார்.

அதாவது, “நீங்கள் கேட்ச் பிடித்து என்னைக் கிண்டல் செய்தாலும், களத்தில் உங்கள் அணி தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறது, நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறோம்” என்பதைச் சுட்டிக்காட்டுவது போல அந்த சைகை அமைந்திருந்தது. இந்த சுவாரசியமான மோதல் ஒருபுறம் இருக்க, இப்போட்டியில் சுப்மன் கில் 18 பந்துகளில் 43 ரன்கள் குவித்து தனது அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

மேலும் இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியைத் தோற்கடித்தது. இவ்விரு வீரர்களுக்கும் இடையிலான இந்த ‘அன்பான மோதல்’ அண்ணன்-தம்பி இடையேயான உறவைப் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.