மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் நஸ்ராபூர் கிராமத்தில், கோடை விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமி ஒருவர், கடந்த மே 1 அன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கற்களால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 65 வயது முதியவர் மீதான விசாரணை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.சாலுங்கே முன்னிலையில் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட முதியவர், “சம்பவத்தன்று சிறுமிக்கு இனிப்பு வழங்கி மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றபோது தற்செயலாகக் கால் தவறி விழுந்ததில் சிறுமியின் தலையில் அடிபட்டது; அவள் அழுததால் பயந்துபோய் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றேன்” என்று நீதிமன்றத்தில் பொய் வாக்குமூலம் அளித்துத் தப்பிக்க முயன்றார். மேலும், சிறுமியை அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றம் காட்டியபோது, அதில் இருப்பது தான் தான் என்று ஒப்புக்கொண்ட முதியவர், உடன் இருப்பது யார் என்று தெரியாது என நாடகமாடினார்.
எனினும், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அஜய் மிசர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த டிஎன்ஏ (DNA) அறிக்கை, முதியவரின் பொய்களை உடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் மற்றும் வாயில் திணிக்கப்பட்ட துணியில் முதியவரின் டிஎன்ஏ ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்துவிட்டு, நீதிமன்றத்தில் “இது வெறும் சாதாரண அடிதடி வழக்கு” என்று அந்த நபர் திமிராகக் கூறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இதற்கு முன்பும் இவர் இருமுறை இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு, போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட வெறும் 16 நாட்களிலேயே 55 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, நீதிமன்ற வரலாற்றிலேயே மிக அதிவேகமாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் இறுதி வாதங்கள் சனிக்கிழமையன்று (ஜூன் 20) நிறைவடைந்துள்ளதால், ஒட்டுமொத்த நஸ்ராபூர் கிராமமும் தீர்ப்பை எதிர்பாத்துக் காத்துள்ளது.
