தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் வியூகம், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று கட்சி நிர்வாகிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை கட்சி பேனரில் பயன்படுத்தியதற்காக, வட்டச் செயலாளரை கட்சியில் இருந்து நீக்கியதாகக் கூறி, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், கட்சியில் பதவி வழங்குவதாகக் கூறி பலரிடமிருந்து பணம் வசூலித்து ஏமாற்றியதாகவும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கட்சி தலைமை உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். மேலும் இந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.