மகாராஷ்டிர மாநிலம்சிவாப்பூர் கிராமத்தில், கணவன்-மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பகவான் போபட் ஜாதவ் (38) மற்றும் அவரது மனைவி ஆஷாபாய் பகவான் ஜாதவ் (27). இவர்கள் இருவரும் தங்கள் வீட்டிலிருந்து சுமார் 300 அடி தொலைவில் உள்ள தங்களது சொந்த விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளனர். அங்குள்ள அத்திமரத்தில் ஒரே கயிற்றைப் பயன்படுத்தி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இதைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் கல்வி பயில்வதற்காக வெளியூரில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இதனால் சம்பவத்தின்போது அவர்கள் வீட்டில் இல்லை. தந்தை மற்றும் தாய் என இருவரையும் ஒரே நேரத்தில் இழந்த குழந்தைகளின் நிலை அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியினர் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
