பெங்களூருவிலிருந்து வாரணாசி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவர் அவசரக் கதவைத் திறக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவர் அளித்த வினோத விளக்கம் அதிகாரிகளை அதிரவைத்துள்ளது. பெங்களூருவிலிருந்து வாரணாசிக்கு சனிக்கிழமை இரவு 8:15 மணியளவில் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அட்னான் என்பவர் பயணம் செய்தார். விமானம் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே, அவர் அவசரக் கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளார். இதனை கவனித்த விமானப் பணிப்பெண்கள் அவரை எச்சரித்து அமர வைத்தனர்.
விமானம் இரவு 10:20 மணியளவில் வாரணாசி லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரானது. தரைப்பகுதியிலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் விமானம் இருந்தபோது, அட்னான் மீண்டும் பாய்ந்து சென்று அவசரக் கதவைத் திறக்க முயன்றார். இதனைப் பார்த்த ஊழியர்கள் கூச்சலிட, உடனடியாகச் செயல்பட்ட விமானி தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு, விமானத்தை மீண்டும் உயரே கொண்டு சென்றார். வானில் ஒருமுறை சுற்றி வந்த பிறகு, இரவு 10:35 மணியளவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயத்தில் உறைந்திருந்த பயணிகள், பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
விமானம் தரையிறங்கியதும் அட்னான் சி.ஐ.எஸ்.எஃப் (CISF) வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், முதலில் தான் ஏன் அப்படிச் செய்தேன் எனத் தெரியவில்லை என்று கூறிய அவர், பின்னர் “தன் மீது பேய் ஏறியிருந்ததாகவும், பேயின் தூண்டுதலால்தான் கதவைத் திறக்க முயன்றதாகவும்” கூறி அதிரவைத்தார்.
மேலும், தான் கோவாவில் விடுமுறையை முடித்துவிட்டுத் திரும்புவதாகவும், தான் இழுத்தது அவசரக் கதவின் கைப்பிடி என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
