லக்னோவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அய்மன் கான், சவூதி அரேபியாவின் ஜித்தாவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 2025 ஏப்ரல் மாதம் முகமது அமீர் கான் என்பவருடன் இவருக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில நாட்களிலேயே கார் மற்றும் கூடுதல் வரதட்சணை கேட்டு அமீர் மற்றும் அவரது குடும்பத்தினர் அய்மனைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஜித்தாவிற்குச் சென்ற பிறகும் அய்மனுக்கு உணவு அளிக்காமல் கொடுமைப்படுத்தியதோடு, அவரது பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துக் கொண்டு இந்தியா திரும்ப விடாமல் தடுத்துள்ளனர். மேலும் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டுத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக அய்மனின் தந்தை லக்னோ காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

டிசம்பர் 18-ம் தேதி அய்மனின் மரணம் குறித்த செய்தி அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. அய்மன் கர்ப்பமாக இருந்ததாகவும், அவரைத் திட்டமிட்டுத் தூக்கிலிட்டுப் படுகொலை செய்துவிட்டுத் தற்கொலை என நாடகமாடுவதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அய்மனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது லக்னோ சின்ஹாட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அய்மனின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்படுகிறது.