யாதகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நிலை என்னவானது என்ற விவரம் தெரியாததால் சுகாதாரத்துறை கடும் அதிர்ச்சியில் உள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் மொத்தம் 31,435 கர்ப்பிணிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 3,127 பெண்களின் பிரசவம் குறித்த எந்தத் தகவலும் அரசிடம் இல்லை.
இவர்கள் ரகசியமாக கருக்கலைப்பு செய்திருக்கலாம் அல்லது பெண் சிசுக்கொலை நடந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ‘கன்னட பிரபா’ நாளிதழில் வெளியான ஒரு புலனாய்வுச் செய்தியைத் தொடர்ந்து,மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்ட அரசு, ஐவர் கொண்ட ஒரு மாநில அளவிலான விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இலக்குகளை எட்டுவதற்காகப் போலியான ‘தாயி கார்டுகள்’ (மகப்பேறு அட்டைகள்) உருவாக்கப்பட்டதா அல்லது சட்டவிரோதக் கருக்கலைப்புகள் நடந்ததா என்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்துள்ளது.
யாதகிரி மாவட்ட ஆட்சியர் ஹர்ஷல் போயர் இதுகுறித்துப் பேசுகையில், போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், முறையற்ற கருக்கலைப்புகளைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு இந்த விவகாரத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
