தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்புக் கூட்டம் சேலத்தில் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகளைத் தவெக நிர்வாகி செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு முதியோர்களும், கர்ப்பிணிப் பெண்களும் நேரில் வருவதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். மேலும், விஜய் ரசிகர்களும் பொதுமக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவதைத் தவிர்க்கவே இந்த அறிவுரை வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தங்களது வீடுகளில் இருந்தபடியே தொலைக்காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சியைக் கண்டுகளிக்குமாறும் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார். நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கட்சித் தலைமை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
