நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டக் பிரேஸ்வெல், கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 35 வயதான பிரேஸ்வெல், நியூசிலாந்து அணிக்காக 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதனைத் தவிர 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

சமீப காலமாக தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்த பிரேஸ்வெல், குறிப்பாக ஏற்பட்ட நீண்டகால விலா எலும்பு காயம் காரணமாக இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த காயம் அவரது விளையாட்டு வாழ்க்கையை பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 60 ரன்களை விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி பிரேஸ்வெல் அசத்தினார். அவரது அபார பந்துவீச்சின் மூலம், 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி இதுவரை வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.