அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கரீபியன் கடல் பகுதியில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த படகுகள் மீது அமெரிக்க ராணுவம் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.
இதேபோன்று, தற்போது அமெரிக்காவை நோக்கி வந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தும் நீர்மூழ்கிக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்ததாவது: “அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பென்டானைல் உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்கள் நிரம்பி இருந்தன என அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
📹 DESTROYED: Confirmed DRUG-CARRYING SUBMARINE navigating towards the United States on a well-known narcotrafficking transit route.
“Under my watch, the United States of America will not tolerate narcoterrorists trafficking illegal drugs, by land or by sea.” – President Trump pic.twitter.com/N4TAkgPHXN
— The White House (@WhiteHouse) October 18, 2025
அந்த கப்பலில் இருந்த போதைப்பொருள் கும்பலின் நால்வரில் இருவர் தாக்குதலில் உயிரிழந்தனர். மற்ற இருவரும் உயிருடன் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு, தங்களது நாடுகளான ஈக்வடார் மற்றும் கொலம்பியாவுக்கு திருப்பி அனுப்பப்படும்,” என்று கூறினார்.
மேலும், “இந்த கப்பல் கரைக்கு வந்திருந்தால் அதிலிருந்த போதைப்பொருளால் சுமார் 25,000 அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள். அமெரிக்க நிலம் அல்லது கடல் வழியாக போதைப்பொருள் கடத்த முயல்பவர்களை இனி எந்த நிலையிலும் பொறுத்துக் கொள்ளமாட்டோம்,” என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் எந்த அமெரிக்க ராணுவத்தினருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
