தமிழ்நாட்டில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதாவது அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த கூட்டணியை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்து வரும் நிலையில் அதற்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்த வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல்லில் நேற்று நடந்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இது பற்றி பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நாங்கள் அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அறிவாலயத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த போது அதற்கு பயந்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் திமுக. அதை யாரும் மறக்க மாட்டார்கள். ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்டது தான் அதிமுக பாஜக கூட்டணி இது ஒரு வெற்றி கூட்டணி அடுத்து வரும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இணைவார்கள். இது திமுக தலைவர்களுக்கு பதற்றம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசியல் சாணக்கியர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார். எங்கள் கூட்டணிக்கு கண்டிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என்று கூறினார்.
