தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இது குறிப்பாக, பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு மற்றும் பிற கட்சிகளை கூட்டணியில் இணைப்பது போன்ற விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் அண்மையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த நிலையில், அக்கட்சியின் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
