சென்னை நெற்குன்றம் பகுதியில்  நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த முகாமில் 15 அரசுத் துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 43 வகையான அரசுச் சேவைகள் பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.

மக்கள் அளிக்கும் மனுக்கள் அன்றைய தினமே தீர்வு காணப்படும் வகையில் முகாம்கள் சிறப்பாக செயல்படுகின்றன என அவர் தெரிவித்தார். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வருவதால், தன்னார்வலர்கள் சேவையிலும் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “அ.தி.மு.க ஆட்சியில் அம்மா உப்பு, அம்மா குடிநீர் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதைப் போலவே, தற்போது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது தவறு. எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சரை ஒருமையில் விமர்சிப்பது சரியான நாகரீகம் அல்ல” எனக் கடும் கண்டனம் தெரிவித்தார்.