மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் பிரம்மாண்ட விழா வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெறுகிறது. இதற்காக ராயபாளையத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற பந்தல்கால் நடும் விழாவிற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பூமி பூஜைகள் செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது
.நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கடந்த 5 ஆண்டுகளாக மிகச் சிறப்பான ஆட்சியை வழங்கி உள்ளது. நாட்டு மக்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் எது தேவையோ, அதை அறிந்து செயல்படும் நல்ல நோக்கம் முதலமைச்சரிடம் உள்ளது. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம். அதனால் தான் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். வரும் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தற்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான அ.தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க.வில் இணைய ஆர்வமாக உள்ளனர்.
அ.தி.மு.க.வில் நீண்ட காலம் பதவிகளை அனுபவித்துவிட்டு, தற்போது சுயநலத்திற்காக தி.மு.க.வில் இணைவதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்வைக்கும் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று கூறிச் சென்றார். மேலும் அதிமுக கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் விலகிய நிலையில் தற்போது ஓபிஎஸ் அதிமுகவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை திமுகவை வெற்றி பெறும் எனக் கூறியது பேசும் பொருளாக மாறி உள்ளது.
