தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றது முதல் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இது ‘திருட்டு திராவிட மாடல்’ ஆட்சியின் போலி சமூக நீதி என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தென் மாவட்டங்கள் தொடர்ந்து பதற்றத்திலேயே இருந்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் டீக்கடையில் இருந்தவர்கள் மீது மர்ம கும்பல் நடத்திய அரிவாள் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பே அதே பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தபோது காவல்துறை விழிப்புடன் செயல்பட்டிருந்தால், இந்த இரண்டு உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். கடந்த காலங்களில் மாணவர் சின்னத்துரை மீதான தாக்குதல், ஆறுமுகமங்கலம் கவின் படுகொலை போன்ற சம்பவங்களில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதே வன்முறையாளர்கள் துணிச்சலாகச் செயல்படக் காரணமாக உள்ளது.
பட்டியலின மக்கள் தொடர்பான ஒவ்வொரு வழக்கிலும் திமுக அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் இன்று வரை உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக, புகார் அளித்தவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்து கொடுமை இழைக்கப்பட்டது. தமிழகத்தில் சுமார் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இரட்டைக் குவளை முறை, கோயிலுக்குள் நுழையத் தடை எனப் பட்டியலின மக்கள் வஞ்சிக்கப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், காவல்துறையினரைச் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்தாமல் வேறு மாவட்டங்களுக்கு மாற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவரது மகனான மு.க.ஸ்டாலின் அந்த உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார். “தென் மாவட்ட அதிகாரிகளை வட மாவட்டங்களுக்கும், வட மாவட்ட அதிகாரிகளைத் தென் மாவட்டங்களுக்கும் மாற்றாததால், காவல்துறையினர் மீது மக்கள் அதிருப்தி அடைந்து போராடும் சூழல் உருவாகியுள்ளது.
திருட்டு திராவிட மாடலின் போலி சமூக நீதி ஆட்சி!
தென் மாவட்டங்களை தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்கும் திமுக அரசு…⁰திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்… pic.twitter.com/xwtlQ1fFtl— Dr.L.Murugan (@DrLMurugan) March 4, 2026
இது குறித்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தும் அரசு விழித்துக்கொள்ளவில்லை, திருப்பூரில் பயங்கரவாதிகள் தங்கியிருந்ததைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தமிழக உளவுத்துறை முடங்கியுள்ளது. மற்ற மாநில காவல்துறையினர் சொன்னால் தான் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே இந்த அரசுக்குத் தெரிகிறது. இத்தகைய அவல ஆட்சியை நடத்தி வரும் திமுகவை வீட்டுக்கு அனுப்பத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
