தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய ஆம் ஆத்மி கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வந்த ஆம் ஆத்மி, முதல்முறையாக ஒரு பெரிய கூட்டணியின் அங்கமாகப் போட்டியிடத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
சென்னையில் இன்று (மார்ச் 04) செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், இது குறித்துக் கூறியதாவது, தமிழகத்தில் நடைபெறவுள்ள இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் விரும்புகிறோம். இந்த முறை திமுக தலைமை எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்றார்.
தமிழகத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களைப் போலத் தனது செல்வாக்கை உயர்த்த ஆம் ஆத்மி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், தற்போது திமுக போன்ற ஒரு வலுவான கூட்டணியில் இணைவது அக்கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இருப்பினும், தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி குறித்து திமுக தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் புதிய கட்சிகளின் வருகை தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
