தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” அளிக்கப்படும் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
விஜய்யின் இந்தத் துணிச்சலான அறிவிப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக-வுடன் அதிகாரப்பூர்வமாகக் கூட்டணியில் இருந்த ஒரே கட்சியான முஸ்தபா தலைமையிலான தமிழ்நாடு முஸ்லீம் லீக் (தமுலீ), தற்போது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் தவெக கூட்டணியில் தற்போது ஒரு கட்சிக் கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் தங்களது கூட்டணிகளைப் பலமாக உறுதி செய்து வரும் நிலையில், விஜய்யின் தவெக எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பெரிய சலுகையைத் தந்தும், மற்ற அரசியல் கட்சிகள் விஜய்யுடன் இணையத் தயங்குவது தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், “மக்கள் தான் எங்கள் கூட்டணி” என்ற தாரக மந்திரத்துடன் விஜய் களம் இறங்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணியில் இணையாத நிலையில், 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
