அண்மையில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் வலியுறுத்தியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு ஓ. பன்னீர் செல்வம் (ஓ.பி.எஸ்) உடனடியாக ஆதரவு தெரிவித்திருந்தார். இது, அ.தி.மு.க.வின் அரசியல் களத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், இன்று (அக். 30) மறைந்த முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்குச் செல்வதற்காக ஓ.பி.எஸ்-சும், செங்கோட்டையனும் மதுரையில் இருந்து ஒரே காரில் ஒன்றாகப் பயணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம், அ.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்களான இவர்கள் இருவரிடையே உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈ.பி.எஸ்) ஆதரவாளர்களுக்கு, இந்த கூட்டுப் பயணம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

செங்கோட்டையனின் ‘ஒன்றிணைப்பு’ கருத்துக்கு ஓ.பி.எஸ். ஆதரவு தெரிவித்ததோடு, தற்போது இருவரும் ஒரே காரில் பயணித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.